சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையில் வெள்ளத்தில் சேதமடைந்த டிவி உள்ளிட்ட பொருட்களை சாலையில் போட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..?
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் புதுச்சேரி மாநிலமே வெள்ளக்காடானது. குறிப்பாக தாழ்வான பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது.
இதனிடையே புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என புதுவை அரசு அறிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், வேடிக்கை பார்த்தவர்களுக்கும் ஒரு நிவாரணமா என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், உருளையன்பேட்டை தொகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,வருவாய்த்துறை மூலம் ஆய்வு செய்து அதிக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில், புயலால் பாதிக்கப்பட்ட டிவி உள்ளிட்டவை பொருட்களை காமராஜர் சிலை அருகே சாலையில் கொட்டி பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதை ஏற்காமல் புதுவை அரசு உறுதியளிக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக் கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மக்களின் திடீர் போராட்டத்தால் பிரதான சாலையான காமராஜர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
No comments