தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க ஒன்றிய அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை!
தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட கோவை மற்றும் குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவிடம், கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., டெல்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை நேரில் சந்தித்து தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த மனுவில், தற்பொழுது மும்பை முதல் மதுரை வரை இயங்கும் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்கவும் (ரயில் எண். 11043/11044) அல்லது மும்பை முதல் தூத்துக்குடி வரை நேரடி ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நடைமேடை பணியை (நடைமேடை எண்.3) விரைவாக முடிக்க வேண்டும். கடந்த கால ஜனதா எக்ஸ்பிரஸின் பாதையான, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்துவது பயணிகளின் போக்குவரத்தை பெருமளவில் குறைக்க உதவும். தற்போது ரயில் எண். 56741/56742 திருநெல்வேலி-தூத்துக்குடி-திருநெல்வேலி 3 மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்படுகிறது. அதனை ஒவ்வொரு 1.30 மணி நேரத்திற்கும் ஒருமுறை இயக்க வேண்டும், ஏனெனில் இது மாணவர்கள் மற்றும் வணிகர்கள் பயன்படுத்த உதவும். இல்லையெனில் திருநெல்வேலி-தூத்துக்குடி-திருநெல்வேலி கோட்டத்தில் மெமு ரயிலை சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். திருச்செந்தூர் விரைவு ரயில் பாதையில் ஆழ்வார்திருநகரி ரயில்வே ஸ்டேஷனில் ஒரு நிறுத்தத்தை சேர்ப்பதற்கான பணியை விரைவாக முடிக்க வேண்டும். இது சென்னைக்குச் செல்லும் மற்றும் சென்னையிலிருந்து வரும் பயணிகளுக்கு உதவியாக அமையும். செய்துங்கநல்லூர், குரும்பூர், காயல்பட்டினம், கச்சன்விளை, மற்றும் ஆழ்வார்திருநகரி ரயில் நிலையங்களில் நடைமேடை உயரத்தை உயர்த்தும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். மேலும் நாசரேத் மற்றும் தாதன்குளம் ரயில் நிலையங்களுக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கவும்.
தாதன்குளம், ஆழ்வார்திருநகரி மற்றும் கச்சன்விளை நிலையங்களில் நடைமேடை விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மேலும், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூர் நிலையங்களின் நடைமேடை தளங்களை நீட்டிக்க அனுமதி வழங்க வேண்டும். குரும்பூர் ரயில் நிலையத்தில் 21 பெட்டிகளுக்கான வரிசைக்கான தளத்தை உயர்த்தி, பயணிகளின் பாதுகாப்பான ஏறுதல் மற்றும் இறங்குதலுக்காக பிராட்-கேஜ் பாதைக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் மக்கள் பயணிக்க வசதியாக, தூத்துக்குடியிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இடையேயான இணைப்பு ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இல்லையேல், சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே நேரடி பகல் நேர ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். தென்னிந்தியாவின் 3 முக்கிய நகரங்களான மதுரை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்பில் நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் சென்னை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் ஜங்ஷன்-தாம்பரம் அந்தியோதயா (முன்பதிவு செய்யப்படாத) எக்ஸ்பிரஸ், திருச்சிராப்பள்ளி-திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை செல்லும் ரயில் உள்ளிட்டவைகளை நிறுத்த அனுமதிக்க வேண்டும். கடம்பூர் ரயில்வே கேட் லெவல் கிராசிங் எண்.454 இல் ஒரு சாலை மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி-கோயம்புத்தூர்-தூத்துக்குடி இணைக்கும் லிங்க் ரயில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இயக்கப்பட்டது. அந்த ரயில் இயக்கப்பட்டபோது பயணிகளின் எண்ணிக்கை 500, 700 ஆக இருந்தது. தற்போது, தூத்துக்குடி-கோயம்புத்தூர்-தூத்துக்குடி புதிய ரயிலை இயக்க வேண்டும். தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாரம் இருமுறை ரயில் இயக்கப்படுகிறது. அதனை, தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி, மேலமருதூர், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு-புதிய ரயில்வே பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தூத்துக்குடி 4வது ரயில்வே கேட் மேற்கு பகுதியில் நிகிலேசன்நகர் அருகே மேம்பாலம் கட்டுவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும். தூத்துக்குடிக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும். பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் சென்னைக்கு வந்து செல்வதற்கு வசதியாக தூத்துக்குடிக்கும், சென்னைக்கும் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments