மகளிருக்கான மகிழ்வகம் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் மகளிர் நம்பிக்கையின் உறைவிடத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர்.
தூத்துக்குடி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு பேருந்து நிலையம் சாலைகளில் சுற்றித்திரியும் மகளிரை கண்டறிந்து அவர்களை பராமரிப்பதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம் தூத்துக்குடி டூவிபுரத்தில் 20 படுக்கைகள் கொண்ட நம்ம தூத்துக்குடி மகிழ்வகம் என்ற மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் மீண்டும் இல்லம் திட்டம் துணை இயக்குநர் கீர்த்தனா ராஜகோபால் வரவேற்றார். தி பான்யன் மருததுவ இயக்குநர் அன்புதுரை திட்ட விளக்கம் அளித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலை வகித்தார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மகளிர் நம்பிக்கையின் உறைவிடமான மகிழ்வகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அங்கு தங்கியிருக்கும் மகளிருக்காக அமைக்கப்பட்டுள்ள தொழில் வளர்ச்சிக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய கனிமொழி எம்.பி: நம்ம தூத்துக்குடி மகிழ்வகம், மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் என்ற இந்த திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில், பான்யன் கார்டன் மற்றும் சோயா தொண்டு நிறுவனங்கள் இணைந்து தூத்துக்குடியில் இப்படிப்பட்ட மகிழ்வகத்தை உருவாக்கியிருக்கும், இந்த நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பல இடங்களில் நடந்துகொண்டு இருப்பதை, உட்கார்ந்திருப்பதை, அலைந்து கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். நமது மனசு ஒரு நிமிடம் அவர்களுக்காக வருத்தப்படுகிறது. பின்னர் நாம், கடந்து சென்று விடுவோம். அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்குவது என்று தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நிறுவனம் தான் பான்யன். இந்தியாவில் பல மாநிலங்களில் மனநிலை ஆரோக்கியக் கொள்கை உருவாக்கியவர்கள் பான்யன் நிறுவனத்தினர்.
ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஒரு அறையில் அடைத்து வைத்து இருப்பார்கள், காலில் சங்கிலி கட்டி இருப்பார்கள், அவர்களைப் பற்றிப் பல சோகமான நிலையைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உரிமைகளும், தகுதியும் இல்லை என்ற நிலை உள்ளது. அவர்களும் அத்தனை உரிமைகளும் இருக்கின்றது என்று நாம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு காலகட்டத்தில் தற்போது நின்று கொண்டிருக்கிறோம். கலைஞரின் வழியில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான மிகப்பெரிய சேவைகளையும், திட்டங்களையும் உருவாக்கித் தந்திருக்கிறார். மனநிலை ஆரோக்கியம் என்பது இந்த உலகத்தில் மக்கள் இடையே இருக்கக்கூடிய பாகுபாடுகள், இந்தியாவில் உள்ள ஜாதி வேறுபாடுகள் மற்றும் ஆண், பெண் என்ற ஏற்றத்தாழ்வுகள், இது அத்தனையும் மனநிலையைப் பாதிக்கக்கூடிய விஷயங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. மனநிலை ஆரோக்கியம் என்பது சில நபர்களுக்கானதாக மட்டும் பார்க்காமல், இது யாவருக்கும் வரக்கூடிய பிரச்சனை. அதை எதிர்கொள்ளும் முதல் படியாக இன்று தூத்துக்குடியில் இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகப்பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரக் கூடிய நிகழ்வு என்றார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, தாசில்தார் முரளிதரன், கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, வைதேகி, கந்தசாமி, ஜெயசீலி, கனகராஜ், கண்ணன், விஜயக்குமார், பவானி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் அபிராமிநாதன், அருண்குமார், கவிதாதேவி, அருணாதேவி, கோகுல்நாத், செல்வி, அன்பழகன், பெல்லா, இந்திரா, மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, வட்ட செயலாளர்கள் பாலகுருசாமி, செந்தில்குமார், பெருமாள்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட அலுவலர் பிரம்மநாயகம், ஆர் சோயா நிறுவன துணை இயக்குநர்கள் சுரேஷ்குமார், ஸ்ரீராமன் மற்றும் கணேசன், மாரிமுத்து, ஜெபராஜ், டேவிட், சரண், அபிஷா உள்பட பலர் பங்கேற்றனர். ஆர் சோயா நிறுவனர் சரவணன் நன்றி கூறினார்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments