அரிவளூர் கிராமத்தில் கனமழை 20 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளிக்கூட முகாம்களில் தஞ்சம்..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரிவளூர் ஊராட்சி நடுத்தெருவில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக 20-க்கு மேற்பட்ட வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்துள்ளது. மேலும் பல வீடுகள் முழங்கால் அளவு மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வருவாய் துறை சார்பில் அப்பகுதியில் வசிக்கும் 70-க்கு மேற்பட்ட பொதுமக்களை அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர். பொது மக்களுக்கு தேவையான உணவு வசதிகளை இன்று காலை முதல் ஏற்பாடு செய்து தந்துள்ளனர். மேலும் அந்த மக்களுக்கு ஊரக வளர்ச்சி துறை மூலமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவ வசதியும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இதேபோல் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், வடிகால் வசதியை ஏற்படுத்தி தருவதுடன், தங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments