ஆட்சிமொழி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் ஆட்சிமொழி விழிப்புணர்வு, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி சட்டவாரத்தை முன்னிட்டு ஆட்சிமொழி விழிப்புணர்வு பேரணி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி, பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி முத்துநகர் கடற்கரை வரை நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ரெசினாள்மேரி, காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கஸ்தூரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முரளி, சுயநிதி பிரிவு தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் செல்வி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துரை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, தாசில்தார்கள் ஞானராஜ், செல்வக்குமார் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments