மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளியை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 22 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே ஊருகுடி கிராமம் வடிமதகு அருகே உள்ள ஏ.எம்.டி நகரில் தண்ணீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதியில் உள்ள பாலையா என்பவரின் வீட்டிற்குள் மழை நீர் உட்புகுந்தது. பாலையா மனைவி மற்றும் பாலையாவின் மாற்றுத் திறனாளி மகள் கனகா என்பவர் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டார். மாற்றுத்திறனாளி வீட்டிற்குள் புகுந்த 4அடி நீரில் சிக்கி கொண்டுள்ளதாக மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அப்பகுதி வாசி ஒருவர் தகவல் அளித்துள்ளார். உடனடியாக அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், தனசேகரன், நாடிமுத்து, மணிகண்டன், சீனிவாசன்,கார்த்திக் அடங்கிய மீட்புக் குழுவினர் வீட்டின் உள்ளே நீரில் சிக்கிய மாற்றுத்திறனாளி கனகாவை பத்திரமாக மீட்டு, சேருடன் தூக்கி வந்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து நிலையம் திரும்பினர். விரைந்து வந்து உதவிக்கரம் நீட்டிய தீயணைப்பு துறை வீரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
No comments