Breaking News

அரசு மரியாதையுடன் முன்னாள் முதல்வர் டி. இராமச்சந்திரன் உடல் நல்லடக்கம் தமிழக வனத்துறை அமைச்சர் க. பொன்முடி பங்கேற்பு !

 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராமச்சந்திரனின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ராமச்சந்திரனின் உடலுக்கு திமுக சார்பில் வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளருமாகிய டி.ஆர் என்று அழைக்கப்படும் தெ. இராமச்சந்திரன் (93) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரை கிராமத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் மறைந்த ராமச்சந்திரன் உடலுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தளின்படி, திமுக சார்பில் துணை பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான முனைவர் க. பொன்முடி மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

மேலும், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். நாஜிம், வி. அனிபால்கென்னடி, இரா.செந்தில்குமார், எல். சம்பத், நாக தியாகராஜன், மு. வைத்தியநாதன், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கௌதமசிகாமணி, புதுச்சேரி மாநில அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ராமச்சந்திரன் உடல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, மடுகரை இடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments

Copying is disabled on this page!