சூறாவளி காற்றினால் பனைமரம் விழுந்து அந்தோணியார் கெபி சேதம்!
தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் திடீர் என வீசிய சூறாவளி காற்றில் பனைமரம் முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் அந்தோணியார்புரம் கெபி அருகே அருகில் இருந்த மின்கம்பங்கள் சேதமடைந்தன.
தூத்துக்குடியில் நேற்று காலை முதல் அவ்வப்போது லேசான மேகமூட்டம் காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு மேகமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்தது. மாலையில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளி காற்றினால் தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் அடுத்த அந்தோணியார்புரம் கெபி அருகே உள்ள ஒரு பனைமரம் பாதியாக முறிந்து விழுந்து அருகில் இருந்த கெபி மற்றம் மின் கம்பங்களில் விழுந்தது. இதனால் கெபியின் சுற்றுச்சுவர் சேதமானது. எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் உள்ள அப்பகுதியில் நல்வாய்ப்பாக பனை மரம் விழும் நேரத்தில் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து ஒயர்கள் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள இன்னும் 3 பனை மரங்களையும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments