மாநகராட்சியில் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை: மேயர் ஜெகன் பெரியசாமி!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பகுதி சபா கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி 39ஆவது வார்டு பகுதி சபா கூட்டம் சிவன்கோயில் அருகே மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், தூய்மை காவலர் நல்லகுமார், பகுதி சபா உறுப்பினர்கள் சங்கர், கண்ணகி, செல்வகுமார், மைதீன், வார்டு அவை தலைவர் கணேஷ் பாண்டியன், வட்ட பிரதிநிதிகள் சந்துரு, தினேஷ், கார்த்திக், இளங்கோ மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று சண்முகபுரம் ரினோன் திருமண மண்டபத்தில் 37, 41, 42 வார்டுகளுக்கான பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி வரவேற்றார். நிதி, பொது குழு உறுப்பினர் கோட்டுராஜா முன்னிலை வைத்தார். கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது, 42வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் மற்றும் ரோடுகள் வசதி குடிதண்ணீர் வசதிகள் செய்து தரும்படி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்டு பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஆண்டுக்கு 4 பகுதி சபா கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி 4வது கூட்டம் நடைபெறுகிறது. இந்த வார்டில் 3 வார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை வசதிகள், கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் கால்வாய் வசதி செய்யப்பட வேண்டும். மேலும் பிரதான சாலைகள் போடப்பட்டு விட்டன. இன்னும் 3 சாலைகள் போடவேண்டும். தற்போது குடி தண்ணீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருவதாக வந்த புகாரின் பேரில் அருகில் உள்ள 41ஆவது வார்டில் குழாய்கள் மாற்றப்பட்டு கருப்பு குழாய்கள் பதிக்கப்பட்டுவிட்டன. 42ஆவது வார்டு முழுவதும் கருப்பு குழாய் பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிதண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் தினசரி தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் தினசரி குடிதண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், சுகாதாரத்தை பொறுத்தவரை டெங்கு உள்பட பல தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க எல்லோருடைய குடியிருப்புக்கும் சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நமக்கு தேவையற்ற கழிவு பொருட்களை கால்வாய்களில் போடாமல் நீரோட்ட பாதையை பாதுகாக்க வேண்டும். தினசரி உங்கள் பகுதிகளுக்கு குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வந்து செல்கின்றன. அதில் தேவையற்ற கழிவு பொருட்களை முறையாக கொடுத்து உதவுங்கள். அனைத்து வளர்ச்சிக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், பகுதி சபா உறுப்பினர்கள் செல்வராஜ், பொன்ராஜ், ஜெபக்குமார் ரவி, சண்முகபுரம் பகுதி திமுக நிர்வாகிகள் உத்திரபாண்டி, தங்கமணி, சற்குணம், மாரியப்பன், மூக்காண்டி, தேவர்பிச்சை, ராஜசேகர், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments