பள்ளி மாணவர்களுக்கு புகைப்படம் எடுக்க பயிற்சி அளிக்கும் திட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!
மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு புகைப்பட பயிற்சி அளிக்கும் திட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்களை புகைப்படம் எடுப்பதில் ஊக்குவிக்கும் விதமாக முதல்கட்டமாக இரண்டு மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புகைப்படம் எடுப்பதற்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் திட்டத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் துவக்க விழா தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து திட்டத்தை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் நடந்த நெய்தல் திருவிழாவின்போது புகைப்பட கண்காட்சி இடம் பெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சிடார் நிறுவனம் புகைப்படம் எடுப்பது தொடர்பான விளக்கமளித்தது. இதனை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் முதற்கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளி, சாமுவேல்புரம் மேல்நிலைப்பள்ளிகளில் இதனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று எதிர்காலத்தில் சிறந்த புகைப்பட கலைஞராக உருவாக வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். புகைப்பட கலையிலும் நீங்கள் வளரவேண்டும் என்பதற்காக இந்த பயிற்சியை சிடார் நிறுவனம் உதவியுடன் இலவசமாக வழங்குகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில், மேற்குமண்டல சுகாதர அலுவலர் ராஜபாண்டி, மாமன்ற, பகுதிச்செயலாளருமான சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகரன், சிடார் நிறுவனத்தின் சார்பில் மைக்கேல்ராஜ், ஜோசப், ஜூட்ஸ் பரஞ்சோதி, பள்ளி தலைமை ஆசிரியர் எமல்டா வெலன்சியா ஹெஸியா, ஆசிரியை அமலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments