20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் -தரங்கம்பாடி கடற்கரையில் இறந்தவர்களுக்கு திதி கொடுத்து வழிபட்ட மீனவர்கள்..
வங்க கடலில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழி பேரலைகள் தாக்கியதில் மயிலாடுதுறை மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு டிசம்பர் 26ம் தேதியான இன்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார், வானகிரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் இருபதாம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தரங்கம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரங்கம்பாடி மீனவர்கள் கடற்கரையில் திரண்டு இறந்த 319 பேருக்கு அவர்களது உறவினர்கள் திதி கொடுத்து, கடலில் பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து இருபதாம் ஆண்டு சுனாமி நினைவு தின மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை எம்பி சுதா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். மௌன ஊர்வலமாக சென்றவர்கள் நினைவு ஸ்தூபி மற்றும் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலி செலுத்தினர். இதேபோல் சந்திரபாடி மீனவர் கிராமத்தில் மீனவர்கள் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் எம்பி எம்எல்ஏ மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீனவ பஞ்சாயத்தார்கள் பங்கேற்றனர்.
No comments