Breaking News

திருச்செந்தூர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2 கல்வெட்டுகள்.


 

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருச்செந்தூர் கடல் பகுதியில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் உள்வாங்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக புயல் மற்றும் கனமழை காரணமாக மாலையில் திடீரென திருச்செந்தூர் கடல் உள்வாங்கி காணப்பட்டது. 

இந்த நிலையில் இன்று சுமார் 80 அடிக்கு உள்வாங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. இதற்கிடையில் பக்தர்கள் கடல் உள்வாங்கிய பகுதியில் நீராடியபோது ஒரு 4 அடி உயரம் கொண்ட பெரிய கல்வெட்டு தென்பட்டுள்ளது.அந்‌த கல்வெட்டில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடலில் கிடந்ததால் அதில் உள்ள எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை.  

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் பேராசிரியர் சுதாகர் மற்றும் பேராசிரியர் மதிவாணன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது கடல் பாறை மேல் கிடந்த கல்வெட்டைப் படி எடுக்க தொடங்கினர். அதற்காக மைதா மாவு கொண்டு அந்த கல்வெட்டில் தடவி கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை தெளிவு படுத்தி படித்தனர். அதை அங்கு நின்ற பொதுமக்களும் பக்தர்களும் பார்த்தனர். 

அந்த கல்வெட்டில் மாதா தீர்த்தம் எனத் தொடங்கியது. இந்தத் தீர்த்தத்தில் பங்கேற்றால் சொர்கம் செல்லலாமெனப் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த கல்வெட்டில் மொத்தம் 15 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து பேராசிரியர்கள் கடற்கரை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். 

அங்கிருந்து அடுத்த 100 அடி தூரத்தில் மற்றொரு 4 அடி உயரம் கொண்ட கருங்கல் தூண் கிடந்தது. அதன் மேல் பகுதியில் எழுத்துக்கள் எதுவும் இல்லை. பொதுமக்கள் உதவியுடன் அதனைப் புரட்டிப் போட்டப்பட்ட போது மறுபுறம் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. 

அந்த கல்வெட்டில் 17 வரிகள் பொறிக்கப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து பேராசிரியர்கள் இருவரும் அந்தக் கல்வெட்டையும் படி எடுத்தனர். அந்த கல்வெட்டில் பிதா தீர்த்தம் எனத் தொடங்கியது. 

இந்த இரு கல்வெட்டுகளும் சுமார் 50 முதல் 100 ஆண்டுகளுக்கு உள்பட்டது எனவும், இவை நாழிக்கிணறு அருகே இருக்கும் பிற நல்ல தண்ணீர் கிடைக்கும் தீர்த்த கிணறுகள் இருந்ததை குறிக்க நடப்பட்டவையாக இருக்கும் எனவும், இம்மாதிரியான நல்ல தண்ணீர் கிணறு இந்தப் பகுதியில் நிறைய உள்ளன எனவும், அவற்றைச் சீரமைத்தால் கடலில் நீராடிய பொதுமக்கள் நல்ல தண்ணீரில் குளிக்க எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்தார். 

முன்பு தீர்த்த கிணறுகள் குறித்து பக்தர்கள் விவரம் தெரிவித்துக் கொள்வதற்காக அந்தந்த தீர்த்த கிணறுகள் அருகே இது போன்ற கல்வெட்டுகள் கொண்ட கற்கள் நடப்பட்டு இருந்திருக்கலாம். அவை நாளடைவில் காற்று மற்றும் மழையின் போது சரிந்து விழுந்திருக்கலாம். இதற்கிடையில் கந்தசஷ்டி நாட்களில் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல் பரப்பை ஜேசிபி இயந்திரம் கொண்டு சமப்படுத்தும் பணி நடைபெறும் அந்த சமயங்களில் மண்ணில் புதைந்த இந்த கல்வெட்டுகள் கடலுக்குள் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.  
கடற்கரை ஓரத்தில் இப்படி நிறைய நல்ல தண்ணீர் கிணறுகள் இருப்பது சிறப்பானது. இதனைத் தூர்வாரி பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் திருச்செந்தூர் மேலும் சிறந்த சுற்றுலாத் தலமாக உருவெடுக்கும். மேலும் நல்ல தண்ணீர் ஊற்றின் நீர் ஓட்டத்தைக் கண்டறிந்து திருச்செந்தூருக்கு நல்ல தண்ணீர் வழங்கும் வாய்ப்புள்ளது. 

எனவே இந்தக் கிணறுகளைச் சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது அவசியம் என பேராசிரியர்கள் தெரிவித்தனர். 

ஏற்கனவே திருச்செந்தூர் வள்ளி குகை பகுதியில் இருந்து கடற்கரை பகுதியில் உள்ள சந்தோஷ மண்டபம் வரை 24 தீர்த்த கிணறுகள் இருந்துள்ளது. குறிப்பாக லக்ஷ்மி தீர்த்தம், துர்கா தீர்த்தம், நாழி கிணறு தீர்த்தம், செல்வ தீர்த்தம், மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம் என பல்வேறு தீர்த்தங்கள் இருந்துள்ளது.

அவை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு விட்டது. தற்போது நாழிக்கிணறு தீர்த்தம் மற்றும் செல்வ தீர்த்தம் மட்டும் தான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நாழி கிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடுகிறார்கள். செல்வ தீர்த்தத்தில் முருகனுக்கு அபிஷேக நீர் கொண்டு செல்லப்பட்டது. அது தற்போது மோட்டார் மூலம் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 கல்வெட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கல்வெட்டில் உள்ள திருத்த கிணறுகள் மட்டுமல்லாமல் 24 தீர்த்த கிணறுகளையும் தூர்வாரி பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
செல்: 7339011001

No comments

Copying is disabled on this page!