கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி செய்யாததை, மீனவர்களுக்கு திமுக அரசு செய்து வருகிறது! படகு போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..
மீனவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி செய்யாததை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது என தூத்துக்குடியில் நடைபெற்ற படகு போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
உலக மீனவர் தினத்தையொட்டி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற படகு போட்டி நடைபெற்றது. இதில், மாநில மீனவரணி துணைச்செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், படகு போட்டியில் முதல் இடம் பெற்றவர்களுக்கு பிரிட்ஜ், 2ஆம் இடம் பெற்றவர்களுக்கு வாஷிங் மெஷின், 3ஆவது இடம் பெற்றவர்களுக்கு செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசு தொகை, ரூ.2 ஆயிரம் ஊக்க தொகையினை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்,
மீனவர்கள் கடலில் மிகுந்த சிரத்தையுடன் தங்கள் பணியை நேர்மையுடன் செய்து வருகிறார்கள். எனவே, மீனவர்கள் வாழ்வு அனைத்து வகையிலும் சிறக்க வேண்டும். மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளாக மீனவர்கள் தினவிழாவை அரசு சார்பில் கொண்டாடி வருகிறது. மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் என இருந்ததை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறது.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்குகென்று எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். நீண்டகாலமாக கடற்கரை பகுதியில் குடியிருப்பவர்களுக்கு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியில் இருந்த மீனவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்ததன் மூலம் உங்கள் குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்பில் அதிகளவில் தேர்வாகி பணியாற்றி வருகின்றனர். உங்கள் கோரிக்கையை ஏற்று மீன்பிடித் துறைமுகம், திரேஸ்புரம் ஆகிய இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதிக்கு தொழிலுக்கு தகுந்தாற்போல் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என்றார்.
நிகழ்ச்சியில், அருட்தந்தையர்கள் ஜேஸ்பர், வின்சென்ட், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர்கள் ராபர்ட், ஸ்மைலின், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, வட்டச்செயலாளர் டென்சிங், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் எமல்டன், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் பவாணி மார்ஷல், நாகேஸ்வரி, சுப்புலட்சுமி, வைதேகி உள்பட பலர் பங்கேற்றனர்.
செ.அந்தோணி இன்பராஜ், நிருபர், தூத்துக்குடி
No comments