Breaking News

தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டு வாரியாக ஆய்வு செய்யப்படும்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.


தூத்துக்குடி மாநகராட்சியில் வரும் நாட்களில் வார்டு வாரியாக சென்று மக்களின் குறைகளை கேட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் நிர்மல்ராஜ் வரவேற்று பேசினார். முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது: தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனைத்து வகையிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

பல்வேறு வார்டு பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் தேவையான இடங்களில் புதிய வடிகால்கள், புதிய சாலைகள் வரைமுறைப்படுத்தி அமைக்கப்படும். மாநகராட்சி பகுதியில் பக்கிள் ஓடை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சிறிய மழை பெய்தாலும், மழைநீர் தேங்கிய பகுதிகளில் இப்போது தேங்காத நிலையை உருவாக்கியுள்ளோம். குறைதீர்க்கும் முகாம் மூலம் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் சுமார் 200 பேர் வரை மனு அளித்து வந்தனர். தற்போது 30 முதல் 35 பேர் வரை மட்டுமே மனு அளிக்க வருகை தருகின்றனர். இதனால் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. வரும் நாட்களில் மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகள் கேட்டு நிர்வர்த்தி செய்யப்படும் என்றார்.

முகாமில், உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், முனீர்அகமது, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மாநகராட்சி கணக்கு குழுத்தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் ராஜேஷ்வரி, ஜெயசீலி, பவானி மார்ஷல், கற்பகக்கனி, சுப்புலெட்சுமி, காந்திமதி தி.மு.க பகுதி செயலாளர் சிவக்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!