மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: ஊராட்சிமன்றத் தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது!
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், ஊராட்சிமன்றத்த லைவர் சரவணக்குமார் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராம சபை கூட்டம் மாப்பிள்ளையூரணியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், அப்பகுதி பொதுமக்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட பொதுநல அமைப்பைச் சார்ந்தவர்கள் பங்கேற்று மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என ஒரு சாராரும், இணைக்க கூடாது என ஒரு சாராரும் வலியுறுத்தினர். மேலும், தங்கள் பகுதியில் பட்டா வழங்காதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாப்பிள்ளையூரணியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மாநகராட்சியுடன் இணைத்தால் 16 கி.மீ சுற்றளவிற்கு பட்டா வழங்க முடியாது என்ற விதியை ரத்து செய்து விட்டு இணைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து ஊராட்சிமன்றத்தலைவர் சரவணக்குமார் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றபின் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து, கிராம வளர்ச்சித் திட்டம் 2025-26 தயாரித்தல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களும் கிராமஅளவில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும். தேவையான இடங்களில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முத்துராமன், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தம்கமாரிமுத்து, சேசுராஜா மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments