Breaking News

விவசாயிகளுக்கு விளைபொருள்களை தரம்பிரிக்க பயிற்சி முகாம்!


விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருள்களை தரம்பிரித்து பகுப்பாய்வு செய்வதற்கான பயிற்சி முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேளாண் விளை பொருட்களை அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வது குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள உழவர் மையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமுக்கு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) முருகப்பன் தலைமை வகித்தார். இதில் மத்திய அரசின் விற்பனையாக்கம் மற்றும் ஆய்வு இயக்குனரக மதுரை மண்டல முதுநிலை விற்பனை அலுவலர் ஹரிஸ், நெய், தானிய வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வகைகள், தேன், மிளகாய், மஞ்சள், தேங்காய் கொப்பரை போன்ற விளை பொருட்களுக்கு அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வது குறித்து எடுத்துக் கூறி செயல் விளக்கம் அளித்தார்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட கலெக்டரி நேர்முக உதவியாளர் மனோரஞ்சிதம் ஆகியோர் பேசினர். மாநில அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வக வேளாண்மை அலுவலர் (பொறுப்பு) தாமரைசெல்வி அக்மார்க் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். திருநெல்வேலி விற்பனை குழு செயலர் எழில், வேளாண் விளை பொருட்களை தேசிய வேளாண் சந்தையில் விற்பனை செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறினார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும், மின்னணு வேளாண் சந்தையான இ-நாம் மூலமாக தேசிய அளவில் வியாபாரிகள் விளை பொருட்களை கொள்முதல் செய்வது பற்றியும், விளை பொருட்களின் தரத்தை அக்மார்க் திட்டம் மூலமாக நிர்ணயம் செய்வது மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தரத்தை ஆய்வு செய்வது குறித்தும் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாடுகள் குறித்தும் வேளாண்மை அலுவலர் இரத்தினசீவா, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தண்டாயுதபாணி, மேற்பார்வையாளர் ராஜ்திலக் ஆகியோர் எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் கிங்ஸ்டன் நன்றி கூறினார். பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!