சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் தனிதனி தேர்களில் எழுந்தருளிய தேரோட்டத்தை திருவாவடுதுறை ஆதீனம் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்:-
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஶ்ரீஅபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த ஆலயமான மாயூரநாதர் ஆலயம் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரி துலா உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இவ்வாண்டு துலா உற்சவம் கடந்த அக்டோபர் மாதம் 17 ம் தேதி முதல் நாள் தீர்த்தவாரியுடன் தொடங்கியது. இதில் கடைசி பத்துநாள் உற்சவம் கடந்த 6ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை ஶ்ரீஅபயாம்பிகை சமேத ஶ்ரீமாயூரநாதர் சுவாமி, வள்ளிதேவசேனா சமேத ஶ்ரீசுப்ரமணியர், விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனிதனி திருத்தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து மகாதீபாரதனை செய்யப்பட்டு நடைபெற்ற தேரோட்டத்தை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். மேலதாள வாத்தியங்கள், சிவகைலாய வாத்தியங்கள் வானவேடிக்கை முழங்க புறப்பட்ட தேரோட்டத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்திழுக்க நான்கு ரத வீதிகளில் வலம் வந்து திருத்தேர்கள் நிலையை அடைந்தது. நாளை காவிரி துலா உற்சவத்தின் முக்கிய விழாவாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மதியம் நடைபெறவுள்ளது. கடைமுக தீர்த்தவாரி உற்சவத்திற்காக நாளை மாவட்’டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments