ஆளில்லா ரோந்து படகு ஐ.என்.எஸ். மாதங்கி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வந்தது மும்பையில் இருந்து புறப்பட்ட ஆளில்லா ரோந்து படகு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய கடற்படையின் சாகர்மாலா பரிக்ரமா திட்டத்தின் கீழ் சாகர் டிபென்ஸ் என்ஜினீயரிங் நிறுவனம் மாதங்கி என்ற ஆளில்லா ரோந்து படகினை உருவாக்கியுள்ளது. இந்த மாதங்கி ரோந்து படகு, தன்னாட்சி தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. சவாலான கடல் சூழ்நிலைகளை சமாளிக்கவும், அதிக போக்குவரத்து உள்ள கடல் வழிகளில் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்கிறது.
இந்த மாதங்கி ரோந்து படகு ஏற்கனவே மும்பையில் இருந்து கார்வார் வரை சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை தொடர்ந்து மும்பையில் இருந்து தூத்துக்குடி வரை 1500 கிலோ மீட்டர் தூர சோதனை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து ஆளில்லா மாதங்கி ரோந்து படகு மும்பையில் இருந்து தூத்துக்குடியை நோக்கி பயணத்தை தொடங்கியது.
இந்நிலையில் மாதங்கி படகு நேற்று (5ம் தேதி) காலை 11 மணி அளவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வந்தடைந்தது. வ.உ.சி. துறைமுகத்தில் மாதங்கி ரோந்து படகிற்கு வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கடற்படை அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments