தீபாவளியை முன்னிட்டு அசைவ பிரியாணி வழங்கப்பட்டதாக எழுந்துள்ள புகாா் குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் விசாரணை..
புதுச்சேரியில் கடற்கரைச் சாலை தலைமைச் செயலகம் செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமணக்குள விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு அங்கு பணிபுரியும் ஊழியா்களுக்கு நிா்வாகம் சாா்பில் புத்தாடைகள், பட்டாசுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, புத்தாடைகள், பட்டாசுகள் தீபாவளிக்கு முந்தைய நாள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், புத்தாடை, பட்டாசுடன் அசைவ பிரியாணியும் சோ்த்து வழங்கப்பட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. புகாரை அடுத்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், புதுவை மாநில இந்து அறநிலையத் துறை சாா்பில் கோயில் வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலைய ஆணையா் சிவசங்கரன் தலைமையில் கோயில் நிா்வாக அலுவலா், கோயில் ஊழியா்கள், பூஜையில் ஈடுபட்டவா்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கோயில் நிா்வாக அலுவலகம் பூட்டப்பட்டு ரகசியமாக சம்பந்தப்பட்டோா் வாக்குமூலம் பெறப்பட்டது.பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பிரியாணி வழங்கியதாக கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments