பிள்ளையார்குப்பம் - செல்லிப்பட்டு இடையே உடைந்த படுகையணை பகுதியை சுற்றிலும் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் அகற்ற கோரிக்கை..
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட படுகை அணையில் தேங்கும் தண்ணீரால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
கடந்த 2016ம் ஆண்டு படுகை அணையில் ஏற்பட்ட சேதம் சீரமைக்கப்படாததால், கடந்த 2021ம் ஆண்டு நவ., 20ம் தேதி பெய்த கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால், முற்றிலும் உடைந்தது.இதனால், எப்போதும் தண்ணீர் தேக்கி கடல்போல் காட்சி அளிக்கும் செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணை, கடந்த மூன்று ஆண்டுகளாக தண்ணீர் தேங்க வழியின்றி வறண்டு காணப்படுகிறது.
இதற்கிடையே, செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே பொதுப் பணித்துறை மூலம் புதிதாக படுகையணை அமைக்க இரண்டு முறை டெண்டர் கோரப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் ரத்தானது. தற்போது மூன்றாவது முறையாக ரூ.30 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
படுகையணை சேதமடைந்த பகுதி இதுவரையில் சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக, செல்லிப்பட்டு சங்கராபரணி ஆறு முழுதும் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து, தற்போது காடு போன்று மாறியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டது.எனவே, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக படுகையணை அமைக்கவும், ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments