புதுச்சேரியில் தவறான சிகிச்சையால் பட்டதாரி பெண் உயிரிழந்ததாக கூறி, தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்து.இவரது மகள் விந்தியா(22). பட்டப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக, மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விந்தியா அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் தெரிவித்தது. மேலும் சிகிச்சைக்காக ரூபாய் ஓன்றரை லட்சம் செலுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள ரூபாய் 50 ஆயிரம் கட்டினால் மட்டுமே உடலை தர முடியும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த, விந்தியாவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படையிலும்,உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மருத்துவமனை வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments