புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு..
புதுச்சேரி மாநிலத்தில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மருத்துவம் சார்ந்த கல்வி பயில மொத்த இடங்களில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
நல்ல உயரிய எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட இந்த இட ஒதுக்கீட்டை ஆண்டு தோறும் குறுக்கு வழியில் போலி சான்றிதழ் அளித்து முறைகேடாக அரசின் துணையோடு வசதி படைத்த மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லூாயில் 22 இடங்களும், பிம்ஸ்-18, வெங்கடேஸ்வரா 38, மற்றும் மணக்குள விநாயகர் 38 ஆக மொத்தம் 116 இடங்கள் ஆண்டு தோறும் என்ஆர்ஐ இடங்களாக நிரப்பப் படுகின்றன. மருத்துவக் கல்லூாயில் சேர நீட் நுழைவு தேர்வில் கட் ஆப் மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத நிலையில், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் குறுக்கு வழியில் என்ஆர்ஐ கோட்டாவில் சேர்ந்து வருகின்றனர்.
இது தொடர்ந்து பல வருடங்களாக இந்த மோசடி புதுச்சேரியில் நடந்து வருகின்றது. ஆண்டுதோறும் மருத்துவக் கல்வியில் என்ஆர்ஐ கோட்டா நிரப்பம் செய்வதற்கு அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு மாபியா கும்பலே திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இவ்வாண்டு 116 என்ஆர்ஐ கோட்டாவிற்காக 186 மாணவர்கள் நுழைவு கட்டணமாக ரூ2 இலட்சம் செலுத்தி தங்கள் பெயரினை பதிவு செய்துள்ளனர். இதில் 116 பேர்கள் தேர்வு செய்யப்பட்டதாக சென்டாக் இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 37 மாணவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யாமல் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடப்பதற்கு முன்பாக மாணவர்கள் பெற்றோர்கள் நல சங்கத்தின் மூலம் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்டாக் நிர்வாகம் சான்றிதழ்களை சரிபார்த்தது.
மூன்றாம் கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 79 மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தபோது அதில் 61 மாணவர்களின் சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களையும் அரசு பரிசீலினை செய்யாமல் மூடி மறைக்கிறது. இது அகில இந்திய அளவில் புதுச்சேரி மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைக்குனிவாகும். சர்வதேச அளவில் இதன் பின்னணியில் குற்றவாளிகள் இருப்பதாக தெரிகிறது. மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில்
அதிகப்படியான மதிப்பெண்கள் எடுத்த புதுச்சேரி மாணவர்களின் இடங்களை விஞ்ஞான ரீதியில் முறைகேடாக என்ஆர்ஐ கோட்டாவின் மூலம் தொடர்ந்து அபகரித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக மேதகு துணை நிலை ஆளுநர் அவர்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் விசாரணைக்கு கொண்டு வரவேண்டும். இதில் பல ஆண்டுகாலமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் நவீன கல்வி குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கி சட்ட ரீதியான நடவடிக்கைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும். இந்த முறைகேட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு தொடர்பு இருந்தால் அந்த கல்லூரியின் அனுமதியை ரத்த செய்ய தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரைக்க வேண்டும்.இது சம்பந்தமாக மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் அனுமதி பெற்று துணை நிலை ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் புகார் கடிதம் அளிக்கப்படும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவ்வப்போது மருத்துவம் படித்த மாணவர்கள் கிராம பகுதிகளுக்கு சென்று பணியாற்ற வேண்டும் என தெரிவித்து வருகிறார். ஆனால், 10 சதவீத மருத்துவ மாணவர்கள் கூட சேவை மனப்பான்மையுடன் கிராம பகுதிகளுக்கு சென்று பணியாற்றுவது கிடையாது. புதுச்சேரி அரசின் சார்பில் ஐந்தாண்டு காலம் முழுமையாக மக்கள் வரிப்பணத்தில் இலவச கல்வி பயிலும் மருத்துவ மாணவர்கள், மருத்துவக் கல்வி முடிந்தவுடன் ஒராண்டு காலம் கிராமப்பகுதியில் கட்டாயமாக அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் மருத்துவப் பணி செய்ய வேண்டும் என பிற மாநிலத்தில் உள்ளது போன்று ஒப்பந்தம் போட வேண்டும். அப்பொழுதுதான் இலவச மருத்துவ கல்வி முடித்த மாணவர்கள் கிராம பகுதிகளுக்கு கட்டாயமாக மருத்துவ பணி செய்யசெல்லும் சூழ்நிலை ஏற்படும். இதில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன்,மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments