Breaking News

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

 


புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பல வருடங்களாக காலியாக இருந்த 99 இளநிலை பொறியாளர் மற்றும் 69 ஓவர்சீஸ் பணி என மொத்தம் 168 பணியிடங்களை நிரப்ப மாண்புமிகு முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையின் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. முதல் தாள், இரண்டாம் தாள் என மொத்தம் 194 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 30 சதவீதம் மதிப்பெண் எடுப்பவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பல்வேறு பிரிவினருக்கும் தகுந்தார்போல் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வு எழுதிய 1551 பேரில் 26 பேர் மட்டும் வெற்றி பெற்றதாக அரசால் முதலில் அறிவிக்கப்பட்டது.

குறைவாக தேர்வானவர்களின் பட்டியல் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அனைத்து விஷயங்களும் சரிபார்க்கப்பட்டது. இதில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டதில் ஏற்பட்ட பிழைகள் திருத்தப்பட்டு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 26 பேருடன் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் புதியதாக 142 பேரையும் சேர்த்து 168 பேர்களுடன் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலையிட்டதின் அடிப்படையில் 142 நபர்களுக்கு பணியிடம் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

194 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தேர்வு தாள்களுக்கும் சேர்த்து குறைந்தபட்ச 30 சதவீதமான தேர்ச்சி மதிப்பெண் சுமார் 58.20 என நிர்ணயிக்கப்பட்டதை 100 சதவீதத்திற்கும் அதே மதிப்பெண்ணாக கணக்கிட்டதாக பல்வேறு செய்திகள் வெளி வருகின்றன. சதவிகிதம் என்றாலே 100 மதிப்பெண்களுக்கு என கணக்கிட வேண்டியதை 194 மதிப்பெண்களுக்கு உரிய அளவில் கணக்கிடப்பட்டிருந்தால் அது தவறான ஒன்றாகும். தேர்வு எழுதியவர்கள் அதிகம் வெற்றிபெறவில்லை. தேர்வு எழுதியவர்களில் அதிக நபர்கள் வெற்றி பெறாததால் வெற்றி மார்க் மாற்றி அமைக்கப்பட்டது என வேறு கருத்தும் நிலவுகிறது. இக்கருத்து உண்மையானால் அதுவும் தவறான ஒன்றாகும். அதற்கு எழுத்து தேர்வே நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அரசின் ஆசிரியர் பணி நியனம் உள்ளிட்ட பல நியமனங்களில் எழுத்து தேர்வு இல்லாமல் இருப்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

168 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு மூலம் தேர்வு செய்வதில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியின் நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது. இத்தோல்வி என்பது அரசின் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட பெரும் சரிவாகும். இது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பகூடியதாக உள்ளதால் இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட முதல் வெற்றி பட்டியல், இரண்டாம் வெற்றி பட்டியல் உள்ளிட்டவைகளில் உண்மை நிலைமைகளை தலைமை செயலாளர் மக்களுக்கு தெளிவான அறிக்கையாக வெளியிட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments

Copying is disabled on this page!