71-வது புதுச்சேரி விடுதலை நாள்இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்..
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலைப்பெற்ற பின்னரும் இந்தியாவின் பல பகுதிகள் அன்னிய ஆட்சிப்பிரதேசங்களாகவே இருந்தன. புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் பிரதேசங்களை பிரெஞ்சுக்காரர்களும், கோவா, டையூ, டாமன் ஆகிய பிரதேசங்களை போர்ச்சுகீசியர்களும் ஆண்டு வந்தனர். இந்தியாவின் பல பிரதேசங்கள் ஜரோப்பிய ஆட்சியாளர்களின் கீழ் இருந்ததால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் பொருளாதாரத்திற்கும் சிக்கலை ஏற்படுத்துவதாக இது அமைந்தது. இதையடுத்து அப்போதைய பாரதப்பிரதமர் பண்டிதஜவகர்லால் நேரு இப்பிரதேசங்களை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை தொடர்ந்து இந்திய அரசுக்கும் பிரெஞ்ச் அரசுக்கும் இடையே 21.10.1954 அன்று சர்வதேச உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பிரெஞ்சு அரசு 1.11.1954 அன்று தனது இந்திய ஆட்சிப் பிரதேசங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க உடன்பட்டது. ஆகவே 31.10.1954 அன்று புதுச்சேரியிலிருந்த பிரெஞ்ச் கவர்னர் மாளிகை, காரைக்காலிலிருந்த பிரெஞ்ச் கவர்னர் மாளிகைகளில் பிரெஞ்ச் கொடிகள் இறக்கப்பட்டன. மறுநாள் 01.11.1954 அன்று இந்திய அரசின் பிரதிநிதிகளாக புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கேவல்சிங்-கும், காரைக்கால் கவர்னர்மாளிகையில் லோகநாத முதலியாரும் இந்திய தேசியக்கொடியை ஏற்றி இப்பிரதேசங்கள் சுதந்திரம் அடைந்ததாக அறிவித்தனர். இதுதான் புதுச்சேரி சுதந்திரத்தின் மிகச்சுறுக்கமான வரலாறு.
புதுச்சேரி அரசு கடந்த 2014 ஆண்டு முதல் நவம்பர் முதல் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடி வருகின்றது. இதன்படி இன்று 71 ஆவது விடுதலைநாளையொட்டி காரைக்கால் கடற்கரை சாலையில் காலை 9.05 மணியளவில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் இந்தியதேசியக்கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் விடுதலை நாள் விழா சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், காவல்துறை கண்காணிப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
No comments