Breaking News

10 அடிக்கு மேல் அலைகள் ஆக்ரோஷமாக எழுவதால் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை..

 


வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றமாக காணப்படுவதுடன், சுமார் 10 அடிக்கு மேல் அலைகள் ஆக்ரோஷமாக எழுவதால் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று பெங்கல் புயலாக வலுவடைகிறது.நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 470 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 580 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 


இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.மேலும் கடலில் தரைக்காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 75 கிலோமீட்டர் வேகம் வரை வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் தங்களது படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.



புதுச்சேரியில் நேற்று பிற்பகல் முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில்,இன்று காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.


 புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் கடலானது சீற்றத்துடன் காணப்படுகிறது.10 அடிக்கு மேல் கடல் அலை ஆக்ரோஷமாக எழுவதால்,கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கடற்கரைக்கும் வரும் சுற்றுலா பயணிகளை போலிசார் திருப்பி அனுப்பி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நகரப்பகுதியில் உள்ள பிரதான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

No comments

Copying is disabled on this page!