Breaking News

கடலில் விழுந்து மாயமான குட்டியாண்டியூர் மீனவரை தேடும் பணி தீவிரம். மீனவரின் குடும்பத்தினரை பூம்புகார் எம் எல் ஏ சந்தித்து நம்பிக்கை அளித்து ஆறுதல் கூறினார்:-

 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான ஐஎன்டி- டிஎன் 16 எம்எம் 1793 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர் கிராமங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இரவு 11:30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு கிழக்கே 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, குட்டியாண்டியூரை சேர்ந்த மீனவர் வேலு என்கிற பழனிவேல் வயது 45. என்பவர் விசைப்படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். பின்னர் அவரை காணவில்லை. மாயமான மீனவர் பழனிவேலை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவர்கள் தங்களது படகுகளில் சென்று தேடினர். இரவு நேரத்தில் தேடுதல் பணியை தொடர முடியாத நிலையில் இன்று அதிகாலை முதல் கடலோர காவல் படை மற்றும் கடலோர காவல் நிலைய போலீசார் பழனிவேலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாயமான மீனவரின் குடும்பத்தினரை அவரது இல்லத்துக்கு சென்று பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை கூறி ஆறுதல் தெரிவித்தார். அவரிடம் மாயமான பழனிவேலை மீட்க துரித நடவடிக்கை எடுக்க அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். அப்போது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!