புதுச்சேரி லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெசவாளர் வீதி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பரின் இருசக்கர வாகனம் கடந்த 14 ஆம் தேதி திருடு போனதையடுத்து, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு புதுச்சேரி கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே லாஸ்பேட்டை காவல் ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீஸார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டபோது, அவ்வழியே ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, ஆவணங்களை கேட்டபோது அது திருட்டு வாகனம் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும், காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் திருபுவனைபாளையம் பாரதிதாசன் நகரை சேர்ந்த ரியாஸ் அகமது (21), வாணரப்பேட்டை அலைன் வீதியைச் சேர்ந்த சொம்பு(எ)சஞ்சய் (21), முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்த சிவகுமார் (21) என்பதும், லாஸ்பேட்டையில் 2 இடங்களிலும், ரெட்டியார்பாளையம் காவல் சரகத்தில் ஒரு இடத்திலும் என மொத்தம் 3 இரு சக்கரவாகனங்களை திருடியது கண்டறியப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments