Breaking News

தூத்துக்குடியில் ஒருகோடி பனை விதை விதைக்கும் பணி: மதர் சமூக சேவை நிறுவனத்திற்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு.


தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனைமர விதைகளை விதைக்கும் பணியில் மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நீர் நிலைகளை பாதுகாக்கவும், நீர் நிலைகளில் மண்ணரிப்பை தடுக்கவும், கரையை வலுப்படுத்தவும், ஆறு, குளம், வாய்க்கால்களில் கரைகளை பலப்படுத்தவும், மேலும் கடற்கரை பகுதிகளை சூறாவளி, புயல், ஆழிப்பேரலை போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், கடற்கரை மற்றும் தீவுப் பகுதிகளிலும் நிலத்தடி நீரை மேம்படுத்தவும், அரசு புறம்போக்கு இடங்களிலும் பனை மர விதைகளை மதர் சமூக சேவை நிறுவனம் விதைத்து வருகின்றது. 

இந்த சேவையை செய்து வரும் மதர் சமூக சேவை இயக்குநர் எஸ்.ஜே. கென்னடியின் சேவையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2021 ஆம் ஆண்டு மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு அரசு கிரீன் சேம்பியன் விருதினையும், ஒரு லட்சம் பரிசு தொகையையும் வழங்கி ஊக்கப்படுத்தியது. இந்நிலையில், காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் விதைக்கப்பட்ட பனை விதைகள் தற்போது நன்றாக வளர்ந்து வருகிறது. 

அதனை வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் நேரில் பார்வையிட்டு, மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவருமான கென்னடியின் சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தமிழினியன், பொருளாளர் பானுமதி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆறுமுகச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!