பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்..
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை காரணமாக கடற்கரை பகுதிகள், சுற்றுலா தளங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.இதனால் அலைகள் 7 அடி வரை ஆக்ரோஷமாக எழுவதால் ராக் பீச்,பாண்டி மெரினா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.
புயல் காரணமாக துறைமுகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், 5-வது நாளாக மீனவர்களுக்கு கடலுக்கு செல்லவில்லை. கடற்கரை பகுதிகள் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவதால் குளிர்ந்த சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வார இறுதி நாளான இன்று பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும், புயல் தொடர்பான புகார்களுக்கு இலவச உதவி எண்களான 112,107, மற்றும் வாட்ஸ் அப் எண் 9488981070 ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments