Breaking News

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடந்தது; பக்தர்கள் வெள்ளத்தில் சூரனை வதம் செய்த முருகன்.


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில். இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விமர்சையாக தொடங்கியது. விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று வெகு விமர்சையாக நடந்தது.

இதற்காக அதிகாலையே கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மதியம் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியதும் அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சர்வ அலங்காரத்துடன் ஆயத்தமானார். 

மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து அவர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து கோயில் கடற்கரைக்கு வந்தார். பின்னர், சூரசம்சம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்க, முதலில் ஜெயந்திநாதருடன் கஜமுகசூரன் சுவாமி போர் புரிந்தார். மூன்று முறை சுவாமியை வலம் வந்த சூரன், பின்னர் எதிர்திசையில் நின்றார். அதைத் தொடர்ந்து கஜமுக சூரனை முருகப்பெருமான் தனது வெற்றிவேலால் வீழத்தினார். அப்போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணை பிளக்கும் வகையில் கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து சிங்கமுகமாக மாறி சூரன், முருகபெருமானிடம் போர் புரிந்தார். மாயை அழித்து செந்திலாண்டவர் தனது வெற்றிவேலால் சிங்கமுக சூரனை வீழ்த்தினார். பின் சூரன் தனது சுயரூபம் கொண்டு சூரபத்மனாக மாறி முருகப்பெருமானிடம் போரிட்டார். ஆணவத்தை அழித்து அவதார மகிமைய உலகிற்கும் உணர்த்தும் வகையில் செந்திலாண்டவர் தனது வேலால் சூரபத்மனை வீழ்த்தினார்.

பின் சேவலாகவும், மாமரமாகவும் மாறி சூரபத்மான் முருகப்பெருமானிடம் போரிட்டார். கருணைக் கடவுளான செந்திலாண்டவர் சூரனை சேவலாகவும், மாமரத்தையும் தன்னுள் ஆட்கொண்டார். சூரனின் முதல் தலையை கொய்ததும் விரதமிருந்த லட்சக்கணக்கான முருக பக்தர்கள் கடலிலும், நாழி கிணற்றிலும் புனித நீராடி தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சிளித்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்பு சுவாமி ஜெயந்திநாதர் கோயில் உட்பிரகாரத்தில் உள்ள, 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தார். சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001 

No comments

Copying is disabled on this page!