பெண்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் வாழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்: அமைச்சர் கீதாஜீவன்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றமகளிர் நலவாரியம் சார்பில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் தூத்துக்குடி அறிஞர் அண்ணா மஹாலில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்லைவர் இளம்பகவத் தலைமை வகித்தார். கருத்தரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திருவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியதாவது:
தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் பிரச்சனைகளைக் களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது மற்றும் தொழிற்பயிற்சிகள் அளித்து, அவர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்குத் தேவையான திட்டங்கள் வழங்க மகளிர் நலவாரியம் 2.9.2022 அன்று தொடங்கப்பட்டது.
அதன்படி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு 10 அலுவலர் மற்றும் 14 அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையாக தொழில் பயிற்சி, சுயதொழில் மூலம் அவர்கள் வாழ்வினை மேம்படுத்த நிதியுதவி அளிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
மேலும், இவ்வாரியத்திற்கென தனி வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கைம் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்றபெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப்பதிவு செய்வதன் மூலம், அரசின் நலத் திட்டங்களில் பயன்பெறவழி வகைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரிலிருந்துவறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள 200 பயனாளிகளை தேர்வு செய்து, அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமுதாயத்தில் வாழ, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரம், நடமாடும் சிற்றுண்டிகடைகள், நடமாடும் பழச்சாறுகடைகள், சலவைக்கடைகள் போன்ற சுயதொழில்கள் மூலமாக நிலையான வருமானம் பெற, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 200 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும். திட்டத்தினை 2024-25 ஆம் ஆண்டில் செயல்படுத்திட ஆணை பெறப்பட்டுள்ளது. சமூகத்தில் இத்தகைய பெண்கள் பாதுகாப்புடன் கண்ணியத்துடனும் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொலைநோக்கு திட்டமாக, விரிவான நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்றபெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் நலன்காக்கும் வகையில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் மூலம் மாவட்டஅளவில் வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களை கொண்டும், சிறந்த கருத்தாளர்களை கொண்டும் நிதியினை முறையாக கையாளுதல் குறித்த கல்வியறிவினை ஏற்படுத்துதல், சொத்துரிமை, குடும்பவன் முறையிலிருந்து உரியபாதுகாப்பு, இலவச சட்டஉதவி, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. எனவே, இந்த கருத்தரங்கிற்கு வருகைதந்துள்ள அனைத்து மகளிர்களும் கருத்தாளர்கள் வழங்கக்கூடிய விழிப்புணர்வு கருத்துகளை கேட்டுதெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் மாநில உறுப்பினர் வழக்கறிஞர் சொர்ணலதா பேசினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டங்கள் குறித்து திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்றார். சுயஉதவிக்குழு மூலம் மகளிர்க்கான திட்டங்கள் குறித்து உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கனகராஜ் பேசினார். பெண்களின் பாதுகாப்பு குறித்து மருத்துவ ஆலோசனையை மருத்துவர் ராஜேஸ்வரி வழங்கினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)ஐஸ்வர்யா, மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரிய மாநில உறுப்பினர் சேவியரம்மாள், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, துணை அமைப்பாளர் பார்வதி, மாநகர மகளிரணி துணை அமைப்பாளர்கள் நாராயணவடிவு, சந்தனமாரி, இந்திரா, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, கவுன்சிலர்கள் சரண்யா, தனலெட்சுமி, மரியகீதா, ஜெயசீலி, வைதேகி, பவானி, வட்ட பிரதிநிதி பாஸ்கர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments