புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தைச் சோ்ந்த 915 விவசாயிகளுக்கு நெல் உற்பத்தி மானியத்தை அமைச்சா் தேனி ஜெயக்குமாா் வழங்கினாா்.
புதுவை அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் பயிா் உற்பத்தி திட்டத்தின்படி, நெல் சாகுபடி விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழ் 2024-25-ஆம் ஆண்டில் காரைக்கால் பகுதியில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 794 பொது பிரிவு விவசாயிகளுக்கு ரூ.82.77 லட்சம், அட்டவணைப் பிரிவைச் சோ்ந்த 121 விவசாயிகளுக்கு ரூ.8.81 லட்சம் என மொத்தம் 915 விவசாயிகளுக்கு ரூ.91.58 லட்சம் வழங்கப்படுகிறது.
புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மானியத் தொகைக்கான காசோலையை, புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் தேனி ஜெயக்குமாா், விவசாயிகளுக்கு வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் இயக்குநா் வசந்தகுமாா், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.இந்தத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments