Breaking News

சீர்காழி பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி நேரில் ஆய்வு ..

 


சீர்காழி விளந்திடசமுத்திரம் மற்றும் சட்டநாதபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் ஊரக வீடுகள் பழுதுபார்ப்பு திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளை நிறைந்தது மனம் திட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடி, தமிழ்நாடு அரசின் திட்டத்தின் பயன்கள்; குறித்து கேட்டறிந்தார்.

சீர்காழி விளந்திடசமுத்திரம் கீழத் தெருவில் ஊரக வளர்ச்சி துறையின் ஊரக வீடுகள் பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளி ராதிகா அவர்களது ஓட்டு வீடு ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் பழுதுபார்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பணிகள் தொடங்கப்பட்ட காலம் மற்றும் இதுவரை வழங்கப்பட்ட தவணைத் தொகை குறித்த விவரங்களை கேட்டறிந்து, பயனாளியிடம் திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, சட்டநாதபுரம் ஊராட்சியில் ஆற்றங்கரை தெருவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்து, பயனாளியுடன் கலந்துரையாடினார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கான்கிரீட் வீடுகள், ஓட்டு வீடுகள், சேதமடைந்துள்ளதை பழுதுபார்க்கும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் ஊரக வீடுகள் பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதன்படி, ஓட்டு வீடுகள் பழுதுபார்ப்பு மற்றும் கான்கிரீட் வீடுகள் பழுதுபார்ப்பு என பிரிக்கப்பட்டு, ஓட்டு வீடுகளை பொறுத்தவரை சிறு பழுதுபார்ப்பு பணிகளுக்கு ரூ.32 ஆயிரமும், மிகவும் சேதமடைந்துள்ள ஓட்டு வீடு பழுதுபார்க்கும் பணிகளுக்கு ரூ.70 ஆயிரமும், அதேபோல், கான்கிரீட் வீடுகளை பொறுத்தவரை சிறு பழுதுபார்க்கும் பணிகளுக்கு ரூ.55 ஆயிரமும், மிகவும் சேதமடைந்துள்ள கான்கிரீட் வீடு பழுதுபார்க்கும் பணிக்கு ரூ.1 இலட்சத்து 50 ஆயிரமும் பயனாளிகளுக்கு 2 தவணைகளாக வழங்கி பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வீடு; பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ் 1665 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது குடியிருப்பு வீடுகள் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது. இதனை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 



அதேபோல், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் 2030- ஆண்டிற்;குள் குடிசை இல்லா தமிழகம் உருவாக்கப்படும் என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் முதற்கட்டமாக 2024-24-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் கான்கிரீட்-வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 2500 வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 5 வட்டாரங்களில் உட்பட்ட கிராமங்களில் பயனாளிகள் தயார் செய்யப்பட்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கான்கிரீட்-வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. 

 கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவர் 360 சதுர அடி பரப்பளவில் அரசின் ஒப்புதலுடன் கூடிய 4 வகையான வடிவமைப்பில் ஏதாவது ஒரு வடிவத்தில் பயனாளிகள் விருப்பத்திற்கேற்ப வீடு கட்டிக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் நிதி மூன்று கட்டங்களாக வழங்கப்படுகிறது.

சீர்காழி விளந்திடசமுத்திரம் கீழத் தெருவில் ஊரக வளர்ச்சி துறையின் ஊரக வீடுகள் பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற திருமதி.ராதிகா அவர்கள் திட்டத்தின் பயன் குறித்து தெரிவித்ததாவது:

 எனது பெயர் ராதிகா. எனது கணவர் பெயர் செல்வம். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். நான் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டாரம், விளந்திடசமுத்திரம் கீழத் தெருவில் வசித்து வருகிறேன். நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டு வீட்டில் வசித்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளாக எங்களது ஓட்டு வீடு மிகவும் பழுதடைந்து மழைக்காலங்களில் மழைநீர் கசிவு ஏற்பட்டு, மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, எனது வீட்டை ஊரக வீடுகள் பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்து எனக்கு பழுதுபார்ப்பு பணிக்கான ஆணை வழங்கினார்கள். இப்பழுதுபார்ப்பு பணிக்கு ரூ.70 ஆயிரம் 2 தவணையாக வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தார்கள். அதன்படி, இப்பழுதுபார்ப்பு பணிகளை தொடங்கி எனது வீட்டின் மேற்கூறை ஓடுகளை மாற்றி அமைத்து மழைநீர் கசிவு ஏற்படாத வகையில் பூச்சு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எங்களை போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இதுபோன்ற தமிழ்நாடு அரசின் திட்டம் மிகவும் உதவியாக உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

முன்னதாக, சீர்காழி வட்டாரத்தில் சட்டநாதபுரம் ஊராட்சி அண்ணாநகர் முதல் தெருவில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரேஷ்,சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன், சீர்காழி நகராட்சி ஆணையர் செல்வி.மஞ்சுளா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!