Breaking News

ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி பணியில் முறைகேடுகள்..? தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆதங்கம்..

 


புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி, மறைமலை அடிகள் சாலையில் தற்போதுள்ள பேருந்து நிலையம் 1980களில் கட்டப்பட்டதாக தெரிகிறது. முன்பு வெள்ளதாங்கி ஐயனார் கோயில் ஏரியாக இருந்த இந்த இடத்தை அப்போதைய அரசு போதுமான கட்டமைப்புகளை ஏற்படுத்தி மிக நேர்த்தியாகவும், உறுதித் தன்மையுடையதாக அந்த இடத்தை மாற்றிய பிறகு நல்ல திட்டமிடலுடன் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நடத்தி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டிருந்தது.

மேற்கண்ட பேருந்து நிலையம் கட்டி முடித்து 40 ஆண்டுகள் கடந்த பிறகும் எந்தவித சிதைவுகள், விரிசல்கள் ஏற்படாமல் உறுதியுடன் அதன் கட்டுமானங்கள் நல்ல நிலையில் இருந்தது. ஆனால் புதுச்சேரியில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும், அதிக சுற்றுலா பயணிகள் வருகையின் காரணமாகவும் பேருந்து பயணிகளுக்கு இட நெருக்கடி ஏற்படுவதை சுட்டிக்காட்டி இந்த பேருந்து நிலையத்தையும், PRTC பணிமனையும் சேர்த்து விரிவாக்கம் செய்ய ஏதுவாக தரைதளத்தில் இயங்கும் PRTC பணிமனையை தற்போது இயங்குவதுபோல் அதை அப்படியே இருக்க செய்து விட்டு அதன்மேல் தளம் அமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நான் கடந்த 2011-16 சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன். அதன் பிறகு நான் மீண்டும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி வந்தேன். அதன்வாயிலாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அதற்கான திட்டம் வகுத்து நிதி ஒதுக்கி இந்த பேருந்து நிலையத்தை விரிவாக்கம் பணிகளை மேற்கொள்ள போவதாக அரசு உறுதியளித்தது.


அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கட்டுமான பணி தொடங்குவதற்காக மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் தலைமையில் பூமிபூஜை 04.07.2023 அன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட நான் இந்த பேருந்து நிலையம் கட்டுமானம் பற்றிய வரைபடம் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் சம்பந்தமான விவரமான தகவல்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு முறைப்படி தெரியப்படுத்துமாறு கேட்டிருந்தேன். ஆனால் மேற்கண்ட ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் எனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் காலம்கடத்தி வந்தனர்.

அதேநேரத்தில் இந்த பேருந்து நிலைய கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப அங்கு கட்டுமானங்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி பலபேர் கூறிவந்ததின் அடிப்படையில் இதுசம்பந்தமாக மேற்கண்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி தொடர்பான அதிகாரிகளிடம் 13.09.2024 அன்று கடிதம் மூலம் அதன் விபரங்களை கேட்டு இருந்தேன். அவர்கள் எந்த பதிலும் எனக்கு தெரிவிக்காததால் நான் மீண்டும் 12.11.2024 தேதியில் கடிதம் அனுப்பி இதுசம்பந்தமான விபரங்களை பற்றி எனக்கு தெரிவிக்காமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்த பிறகு எனக்கு கடந்த 15.11.2024 அன்று Puducherry Smart City Development Limited என்ற துறையின் மூலம் 95 பக்கம் கொண்ட கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள்.

அதில் முதலில் இந்த பேருந்து நிலைய கட்டுமான திட்டம் தரை மற்றும் முதல்தளத்துடன் 42.29 கோடி மதிப்பீட்டிற்கு கட்டுமான பணி மேற்கொள்ளப்பட இருந்ததாகவும், ஆனால் 31.50 கோடிக்கு தான் அரசின் அனுமதி கிடைத்தது அதனால் முதல்தளத்தை கைவிட்டுவிட்டு தரைதளத்தில் மட்டுமே பணிகள் மேற்கொள்ள முடிவெடுத்து டெண்டர் விட்டதில் 29.55 கோடிக்கு டெண்டர் உறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கி பணிகள் தொடங்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

ஆனால் ஐந்து மாடி திட்டத்தின்படியே பணிகள் தொடங்கப்பட்டதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. தரைதளத்திற்கு மட்டும் தான் அனுமதி கொடுக்கப்பட்டது என்று தெரிந்தவுடனே அதன்படி திட்டமிட்டு மாற்று வரைபடத்தை (Reverse Plan) தயாரித்து தரைதளத்திற்கு ஏற்றவாறு (Fountation) அடித்தளம் அமைக்கும் விதமாக திட்டம் தீட்டி அதன்படி கட்டுமானத்தை கட்ட உத்தேசித்து இருக்க வேண்டும். ஆனால் இந்த பேருந்து நிலைய கட்டுமான திட்டம் சரியான திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டிருப்பது என்பது இதிலிருந்தே கண்கூடாக தெரிகிறது. இவர்கள் ஐந்து மாடிக்கு கட்டமைப்புக்கு ஏற்ப அடித்தளம் அமைத்திருப்பதாக கூறி பூமிக்கு அடியிலேயே பெரும்தொகையை செலவழிக்கப்பட்டதாக கூறுவது எப்படி சாத்தியமாகும்? இதற்கான சிந்தனைக் கூட (அடிப்படை அறிவு கூட) அதிகாரிகளுக்கு இல்லையா என்று கேட்க தோன்றுகிறது.

ஏற்கனவே ஒதுக்கிய பணத்தை அப்படியே செலவு செய்தே ஆகவேண்டும் என்ற கோணத்தில் அந்த பணத்தை வீணடித்து இருக்கிறார்கள்.இவர்கள் அந்த தொகையை வீணடிக்காமல் மிச்சபடுத்தி இருந்தால் அதன்மூலம் இந்த பேருந்து நிலையத்தில் இன்னும் அதிநவீன அடிப்படை வசதிகளை அதிகளவில் ஏற்படுத்துவதற்கு அந்த பணத்தை பயன்படுத்தி இருக்கலாம். அதை விட்டுவிட்டு எதிர்கால விரிவாகத்திற்காக ஐந்து மாடி கட்டமைப்புக்கு (Fountation) அடித்தளம் அமைக்கப்பதற்காகவே அதிக தொகையை செலவழித்து விட்டதாக கூறுயிருப்பது அபத்தமாக இருக்கிறது.

இந்த பேருந்து நிலையத்தில் தற்போைைதய கட்டுமான அமைப்பில் 31 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணிகள் காத்திருப்பகம், 4 போக்குவரத்து அலுவலகம், 3 பயணசீட்டு பதிவகம், 6 ஆம்னி பேருந்து அலுவலகம், 2 பயணிகள் இரவு தங்கும் அறைகள், 1 விசாரணை அலுவலகம், 1 தகவல் மையம், 1 முதலுதவி அறை, 1 கட்டுப்பாடு அறை, நிர்வாக அலுவகம், மின் அலுவலகம், பொருள் காப்பகம் ஆகியவற்றுடன் 46 பேருந்து துறைகள் அடங்கும். மேலும் வாகனம் நிறுத்துவதற்கு 45 இருசக்கர வாகனமும், 25 நான்கு சக்கர வாகனமும், 18 ஆட்டோ மற்றும் 10 டாக்ஸி நிறுத்த இடம் வசதி செய்யப்பட்டுள்ளதாக இவர்களே கூறுகிறார்கள். அதிலிருந்து இந்த பேருந்து நிலையத்தில் மேற்கண்ட அம்சங்கள் மட்டும் தான் இடம்பெற முடியும் வகையில் இந்த பேருந்து நிலையத்தின் மொத்த அளவான 4.41 ஏக்கரும் முழுமையாக பயன்படுத்தபட்டுவிட்டது என்பது இதன் மூலமாக தெரியவருகிறது. இதற்கு மேல் அங்கு வேறு எந்த கட்டுமானத்தையும் செய்ய முடியாது என்று இதிலிருந்து தெரியவருகிறது.

ஆனால் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட துறையினர் கூறுவது போல் எதிர்காலத்தில் ஐந்து அடுக்கு தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டி அதை பல தொழில் நிறுவனங்களுக்கு வாடகைவிடும் பட்சத்தில் ஒவ்வொரு தளத்திலும் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், மற்றும் Mall போன்ற அம்சங்கள் இடம்பெற செய்தால் அங்கு பணிபுரிபவர்கள் வாகனம் மற்றும் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் வாகனங்களை எங்கு நிறுத்துவார்கள்? இந்த பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களை கொண்டு வந்து நிறுத்துவார்கள். அதில் அங்கு வியாபாரம் செய்பவர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பேருந்து பயணிகள் ஆகியோர் அடங்குவர். ஆனால் தற்போது இங்கு 445 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே இடம் ஒதுக்கி இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இதிலிருந்தே அங்கு இதற்கு மேல் வாகனங்கள் நிறுத்த இடம்இல்லை என்று தெரிந்தும் எந்தவொரு திட்டமிடல் இல்லாமல் தான்தோன்றிதனமாக இப்படி பணத்தை வீணடித்துவிட்டு நாங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பேருந்து நிலயத்தில் ஐந்து மாடி கொண்ட கட்டிடம் கட்டுவதற்காக தான் மேற்கண்ட தொகையை செலவழித்து இருப்பதாக கூறுவது என்பது புதுச்சேரி மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கிறது.

இப்படி மக்களை ஏமாளிகளாக பார்க்கும் இந்த அதிகாரிகள் புதிய பேருந்து நிலையம், கிழக்கு திசையில் கழிப்பறையை ஒட்டிய சுப்பையா நகருக்கு செல்லும் வழியில் இயங்கி வந்த சைக்கிள் ஸ்டேண்ட் வளாகத்தை வரை படத்திலேயே காட்டாமல் அந்த இடத்தில் எந்தவொரு பணியும் செய்யாமல் அப்படியே விட்டு வைத்து இருக்கிறார்கள். அந்த இடத்தை பயன்படுத்தாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

இப்படி ஐந்து மாடி கட்டுமானத்திற்காக அடித்தளம் (Fountation) அமைப்பதிலும், ஒரு சதுரடி கட்டுமானத்திற்கு ஏறக்குறைய 5000 ரூபாய் (ரூபாய்.4700) செலவழித்திருப்பதாக கூறும் புதுச்சேரி Smart City Development Limited என்ற இந்த துறையானது முழுக்க முழுக்க மத்திய அரசு பணத்தை கொள்ளையடித்து இருப்பதுடன் புதுச்சேரி அரசின் பங்களிப்பான மக்கள் வரி பணத்தையும் கொள்ளையடித்து கொண்டு இருப்பது இதன்மூலம் உறுதியாக தெரியவருகிறது. இதை மேதகு துணை நிலை ஆளுநர் அவர்களும், மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களும் கவனத்தில் கொண்டு இந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியில் நடைபெற்று இருக்கும் முறைகேடுகள் மீதும் ஊழல் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு: இந்த கட்டுமானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, கண்காணிப்பு கேமராக்கள், முகப்பு பகுதியில் இருக்க வேண்டிய போலீஸ் கண்காணிக்கும் இடம் போன்ற பல முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

No comments

Copying is disabled on this page!