கந்தசஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தங்கத்தேர் பிரகாரத்தை வலம் வந்தது.
இதற்கிடையில் கோவிலில் பெருந்திட்ட வளாகப்பணிகளில் வடக்கு மற்றும் கிழக்கு கிரி பிரகார தரைத்தளம் பணிகள் நடைபெற உள்ளது என்றும் இதனால் கடந்த 17.07.2024 ஆம் தேதி முதல் தினந்தோறும் மாலை 6 மணி அளவில் பிரகாரத்தை சுற்றி வரும் தங்கத்தேர் வருவது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பணிகள் நிறைவடைந்தது. எனவே கந்தசஷ்டி திருவிழாவிற்கு தங்கத்தேர் பிரகாரத்தை சுற்றி வலம் வருவதை நடத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பக்தர்களின் கோரிக்கை ஏற்று கந்தசஷ்டி விழா தொடங்கும் நாள் முதல் நிறைவு விழா வரை தங்கத்தேர் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் அதிகாலை தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதின சஷ்டி மடத்தில் சுவாமி ஜெயந்திநாதர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு அபிஷேக அலங்காரம் நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெண்கள் குடும்பத்தில் கஷ்டம் விலகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் மாவிளக்கு எடுத்து வழிப்பாடு செய்தனர்.
அதைத் தொடர்ந்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கத்தேரில் பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த தங்கத்தேரினை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் உள்பட முருக பக்தர்கள் ஏராளமானோர் பிடித்து இழுத்தனர். தங்கத்தேர் கிரிப்பிரகாரத்தை சுற்றி வலம் வந்தது. ஏராமாள பெண்கள் கோலாட்டம் ஆடியும், பஜனைகள் பாடியும் வந்தனர்.
இந்த கந்தசஷ்டி திருவிழாவிற்காக விரதம் மேற்கொண்டு வரும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் தங்கத்தேரில் வலம் வந்த ஜெயந்திநாதரை மனமுறுகி வணங்கினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001
No comments