மாயூரநாதர் ஆலயத்தில் தருமையாதீன குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் உள்ளது. இங்கு கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி மூலஸ்தானத்தில் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவர் மூலஸ்தானத்தின் எதிரே எழுந்தருளி மங்கள தீபாரதனை நடைபெற்றது. பின்னர் ஆலயம் வலம் வந்து ஶ்ரீஅபயாம்பிகை உடனுறை ஶ்ரீகெளரி மாயூரநாதர் பெருமானிடம் மகாமண்டபத்தில் சிறப்பு கலச பூஜையுடன் வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. முருகப்பெருமான் அம்பாளிடம் சத்யாயுத வேல் வாங்கும் நிலையில் இவ்வாலயத்தில் எங்கும் இல்லாத வகையில் கெளரி மாயூரநாதரிடம் ஶ்ரீசுப்ரமணிய சுவாமி வஜ்ராயத வேல் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குமரக்கட்டளை மண்டபத்தில் மயில் வாகனத்தில் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி எழுந்தருளினார். ஶ்ரீஅபயாம்பிகை சமேத மாயூரநாதர் வெளிமண்டபத்திலும் எழுந்தருளிய பின்னர் சோடச தீபாரதனை மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் பூரணாகுதி செய்யப்பட்டு கீழரதவீதியில் சுவாமி அம்பாள் முன்னிலையில் பத்மாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர், சிங்கம் அசுரன் வடிவில் வந்த சூரபத்மனை முருகப்பெருமான் வஜ்ராயுத வேலால் சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானை சாந்தப்படுத்தும் வகையில் வெள்ளி குடத்தில் பால் நெய்வேத்திய படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் மயில் வாகனத்தில் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்ஹார விழாவை கண்டு தரிசனம் செய்தனர்.
No comments