மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா துவக்கம்.
மயிலாடுதுறையில் ஶ்ரீஅபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்து வந்தபோது மனம் மகிழ்ந்த சிவபெருமான் ஆண்மயிலாக தோன்றி அம்பிகைக்கு கௌரி தாண்டவத்தில் காட்சி கொடுத்த கெளரி மாயூரநாதர் ஆலயம் உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை தனிசன்னதியில் ஆறுமுகம் கரந்த ஒருமுக வள்ளலாய் மயிலேறும் பெருமானாய் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தில் ஆறு நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் திருநாள் நிகழ்ச்சி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரவு ஶ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வெள்ளி படி சட்டத்தில் குமரக்கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ஶ்ரீவிநாயகர் ஶ்ரீசண்டிகேஸ்வரர் சுவாமிகள் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருளி மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் குமரக்கட்டளை மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிக்கு சோடச தீபாரதனை நடைபெற்று தேவாரப் பாடல்கள் முருகனுக்கு உகந்த பக்தி பாடல்கள் பாடப்பட்டு மகாதீபராதனை நடைபெற்றது. பின்னர் ஶ்ரீவிநாயகர், ஶ்ரீசன்டிகேஸ்வரருடன் வெள்ளிபடிச்சட்டத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி யாகசாலை மண்டபங்களின் முன்பு எழுந்தருளி மகாபூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளி படிசட்டத்தில் நடைபெற்ற ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வீதியுலா காட்சியில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில் தருமபுர ஆதீனம் குமரக்கட்டளை டிரஸ்டி ஸ்தானீகம் ஶ்ரீசுப்ரமணிய தம்பிரான் சுவாமிகள், மற்றும் மாயூரநாதர் ஆலய நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை இருவேளையும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சி நடைபெற்று வருகின்ற 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வேல் வாங்குதல், ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments