ஈரோட்டில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை விற்ற 4 பெண் புரோக்கர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நித்யா (28) என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, ஈரோட்டில் வசித்து வரும் சந்தோஷ்குமார் என்பவருடன் கடந்த 2 வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இதனையடுத்து அந்த குழந்தையை விற்பனை செய்ய திட்டமிட்ட அவர்கள், பானு என்ற இடைத்தரகர் உதவியுடன் கடந்த 30ம் தேதி நாகர்கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு, மேலும் சில இடைத்தரகர்கள் ஆன, ஈரோட்டை சேர்ந்த செல்வி மற்றும் சிலரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு 4 லட்சத்து 50 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டனர். பின்னர் புரோக்கர் கமிஷனாக 1 லட்சத்து 20 ரூபாயை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்துடன் ஈரோட்டிற்கு வந்த நிலையில், தாய் நித்யா குழந்தையின் நினைவாக இருந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து நித்யா அளித்த தகவலின் பேரில், அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய (நித்யாவின் ஆண் நண்பர்) சந்தோஷ்குமார், இடைத்தரகர்கள் பானு, செல்வி, ராதாமணி மற்றும் ரேவதி ஆகிய 5 பேரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகர்கோவிலை சேர்ந்த ஒரு குழந்தையில்லா தம்பதிக்கு, அந்த குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை காவலுக்கு அனுப்பினர்.
கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் ராதாமணி மீது ஏற்கெனவே பெங்களுரில் கருமுட்டை விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ள போலீசார், இந்த பெண் குழந்தை விற்பனை விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
No comments