துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்..
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளினை இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடவும் வேண்டும் என திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், திமுகவினர் ஏழை எளிய, ஆதரவற்ற மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்களை வழங்கிட சிறப்பாக கொண்டாட வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் நலனுக்காக கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதற்காக விளையாட்டில் பெரும் முன்னேற்றம் அடைவதற்காக உழைக்கும் துணை முதல்வரின் பிறந்தநாளில் ரத்ததான முகாம், மருத்துவ முகாம், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள், அன்னதானம், ஆதரவற்றோர் இல்லங்களில் வாழ்பவர்களுக்கு உணவு மற்றும் உணவு வழங்குதல், தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.
தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்புகள் சார்பாக 48 இடங்களில் பல்வேறு விதமான நலத்திட்டம் மற்றும் உணவு, உடை வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளன. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சார்பாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் விளையாட்டு போட்டிகளும், ரத்ததான முகாம்களும் 30 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
எனவே, அன்றையதினம் கழக கொடியேற்றி, இனிப்பு வழங்கி இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடவுள்ள நிகழ்ச்சிகளில் அந்தந்த இடங்களில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள், கழக முன்னணியினர் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
No comments