Breaking News

தூத்துக்குடி நீதிமன்றத்தை புறநகரில் அமைக்க முடிவு: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்..

 


சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலிள்படி தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள நீதிமன்றத்தை புறநகரில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து பேசியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 30 சதவீதம் வரை காலி மனைகள் உள்ளது. அவற்றில் மழைநீர் தேங்குவதால் அருகில் உள்ள குடியிருப்புகளும் பாதிப்புதக்குள்ளாகிறது. எனவே, மாநகராட்சி சார்பில் காலி மனைகள் கணக்கெடுக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சரி செய்யப்பட இருக்கின்றன. இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் ஒன்றன்பின் ஓன்றாக பணிகள் நடைபெற்றாலும் முழுமையாக நிறைவடைவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநகராட்சிக்கு நிதிஓதுக்கீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவந்ததும் 60 வார்டுகளுக்கும் முழுமையாக தார் சாலைகள் அமைக்கப்படும். சில பகுதிகளுக்கேற்ப பேவர்பிளாக் சாலையும், கால்வாய் வசதியும் முழுமையடையும், புதிய குடியிருப்பு பகுதிகளுக்கேற்றாற்போல் மாநகராட்சி பகுதியில் 1200 புதிய மின்விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. அதேபோல் போக்குவரத்து நெருக்கடி குறைவதற்கு புறநகரிலிருந்து பிரதான சாலைக்கு வருவதற்கு மண் சாலையாக இருக்கும் சாலைகள் கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் அதுவும் தார் சாலையாக மாற்றப்பட்டு மக்கள் போக்குவரத்திற்கு ஏற்றவாறு புதிய வழித்தடம் உருவாக்கப்படும்.

மாநகராட்சி பகுதியில் மொத்தம் 206 பூங்காக்களில் 44 பூங்காக்களின் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அவை விரைவில் மீட்கப்படும். முத்தையாபுரம் பகுதியில் விரைவில் பசுமை ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, நமது பண்பாட்டை எடுத்துக்கூறும் வகையில் ஓவியங்கள் வரையப்படும். தூத்துக்குடி மாநகர பகுதியில் மாசு அளவீடு 170லிருந்து 56 ஆக குறைந்துள்ளது. மேலும் முத்துநகர், ரோச்பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் மேம்படுத்தப்படவுள்ளது. நாம் பொறுப்பேற்ற பின் தனியார் பங்களிப்புடன் புதிதாக 20 பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுவரை குடிநீர் இணைப்பு இல்லாத பகுதி மக்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், கீதாமுருகேசன், இசக்கிராஜா, முத்துவேல், ரெக்ஸின், மகேஸ்வரி, கந்தசாமி, விஜயகுமார், ரெங்கசாமி, சந்திரபோஸ், ராமுஅம்மாள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பேசும்போது, மாநகராட்சியில் தீர்வை கட்டணம் அதிகமாக உள்ளது. அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பழமை வாய்ந்த சங்கரநாராயணன்பிள்ளை பூங்காவை சீரமைக்க வேண்டும். மேலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்த பணிகளையும் பாராட்டி மேயருக்கும், ஆணையருக்கும் நன்றியும் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் தங்களது பகுதியில் உள்ள பூங்காநிலை குறித்து பேசிய பேச்சுக்கு திமுக கொறடா சுரேஷ்குமார் குறுக்கீட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதனையடுத்து, மேயர் ஜெகன் பெரியசாமி பதிலளிக்கையில், மாநகரப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களுக்காக தனியாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் கூறியதன்படிதான் மாநகர் பகுதியில் உள்ள நீதிமன்றத்தை புறநகரில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு, அதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் எல்லா பகுதிகளிலும் சூழற்சி முறையில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என்றார்.

கூட்டத்தில், உப்பாற்று ஓடை பகுதியில் உள்ள கடைகள், புதிய பேருந்துநிலையம் ஆம்னி பேருந்து நிற்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் விடுவது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநகராட்சி வழக்கறிஞர் சாமுவேல் ராஜேந்திரன் மறைவுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், துணை ஆணையர் ராஜாராம், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், பாலமுருகன், வெங்கட்ராமன், இர்வின்ஜெபராஜ், துணை பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி பொறியாளர் ராமசந்திரன், நகர்நல அலுவலர்கள்.

வினோத்ராஜ், சூரியபிரகாஷ், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டலத்தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், பட்சிராஜ், ஜாக்குலின்ஜெயா, ஜான்சிராணி, சரண்யா, எடின்டா, ராஜதுரை, ரிக்டா, மெட்டில்டா, முத்துமாரி, தனலட்சுமி, அதிஷ்டமணி, சோமசுந்தரி, மும்தாஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!