Breaking News

பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்..

 


பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், பொதுப்பணித்துறை கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில்: 2023-24ல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. அனைவருக்கும் முழுமையாக காப்பீட்டு தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீடு வழங்குவதில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் அளவில், தாலுகாக்களில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை நடத்தினால், அந்தந்த பகுதி விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வசதியாக இருக்கும். குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள விவசாயிகளின் நகையை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த ஆண்டு பெய்த மழையால் கடம்பாகுளம் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதில் இருந்து விவசாயிகள் இன்னும் மீளமுடியாத நிலையில் உள்ளனர். ஆகையால் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வாழை பயிருக்கு முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை விவசாயிகள் பிடித்தால், வனத்துறையினர் வழக்கு பதிவார்களோ என்ற அச்சம் உள்ளது. ஆகையால் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளை பாதுகாக்க நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும். மேல செக்காரக்குடியில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கருங்குளம் கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் நியமிக்க வேண்டும். கீழ விளாத்திகுளம், அயன்வடமலாபுரம் பகுதியில் விவசாயிகளின் நிலங்களை கோயில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்வதை தடுக்க வேண்டும். சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்.

கோரம்பள்ளம் குளத்தின் 3 முதல் 8 வரையிலான மடைகளை சீரமைக்க வேண்டும். திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையார்குளம் வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கருமேணி ஆற்றில் சுப்புராயபுரம் பகுதியில் உள்ள தடுப்பணை உடைந்து சேதமடைந்திருப்பதை சரி செய்யவேண்டும். கடம்பாகுளம் மறுகால் ஓடை உடைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் போதிய வருவாய் இல்லாமல் சிரமப்படுகின்றனர். பயிர் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பயன்படும் நேரத்தில் விரைவாக வழங்க வேண்டும். பயிர் சாகுபடி செலவுக்கு பணம் இல்லாமல் நகைகளை அடகு வைக்கும் நிலைதான் உள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடனும் கிடைப்பது இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பேசுகையில்: பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட விவசாயிகள் மற்றும் பயிர்களுக்கு இம்மாத இறுதிக்குள் இழப்பீடு தொகை வந்துவிடும். மாவட்டத்தில் உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. எந்த பகுதிக்கு தேவை என கண்டறிந்து அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டாட்சியர் அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களை நடத்தலாம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாழை பயிருக்கு காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாழை விவசாயிகள் காப்பீடு செய்ய விரும்புவதில்லை. கடந்த ஆண்டு 60 பேர் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர். வாழை விவசாயிகளும் அதிகமாக காப்பீடு செய்ய முன்வர வேண்டும்.

புதூர், விளாத்திகுளம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தங்கக்கூடிய 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் உள்ள சீமைக்கருவேலம் உள்ளிட்ட முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பன்றி பிடிப்போர் மூலம் அவைகளை பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் காணப்படுபவை காட்டுப்பன்றிகள் அல்ல, நாட்டு பன்றிகள்தான் என்று டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். எனவே, விவசாயிகள் அவைகளை பிடித்து அகற்றலாம். வனத்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யமாட்டார்கள். அதே நேரத்தில் மான்களால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விவசாயிகள் பயன்படுத்தும் நிலங்கள் கோவில் பெயருக்கு மாற்றப்படுகின்றன. இதுதொடர்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையார்குளம் கால்வாய்கள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும், ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டு அடையாளம் காணப்படுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக பதில் அளிக்க வேண்டும் என்றார்.

No comments

Copying is disabled on this page!