பெரியார் நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பாஜக எம்.எல்.ஏ ஆதரவுடன் சர்ச் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு..
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகரில் ஜப்பார் பாய் தோட்டத்தில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் இயங்கி வந்து அங்கன்வாடி அகற்றப்பட்டதால் அந்த இடம் காலியாக இருந்தது. இதனால் பாஜக எம்.எல்.ஏ ஆதரவுடன் அந்த பகுதி மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தில் இரவோடு இரவாக தற்காலிக தேவாலயம் அமைத்து ஆரோக்கிய மாதா சிலையை வைத்து வழிபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினர் அரசுக்கு சொந்தமான இடத்தில் சர்ச் வைக்க எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக சர்ச்சை அகற்ற வேண்டும் என கூறி கடந்த மாதம் புதுச்சேரி மாநில இந்து முன்னணி தலைவர் சனில்குமார் தலைமையில் விநாயகர் சிலையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை சர்ச் அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் பெரியார் நகர் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒன்று கூடினர். அங்கன்வாடி சொந்தமான இடத்தில் சர்ச் கட்டியவர்கள் மீது நடவடிக்கு எடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக செயல்படும் குடிசைமாற்று வாரியம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர், பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரிகார்டுகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது தடுப்புகளை மீறி செல்ல முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் போலீசாருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments