புதுச்சேரியில் விடுதலை நாள் விழாவையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் ரங்கசாமி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தது. ஆனால் 300 ஆண்டுகள் பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியானது இந்தியா விடுதலை பெற்ற 7 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி விடுவிக்கப்பட்டு, இந்திய அரசுடன் இணைந்தது. இதனால் புதுச்சேரி விடுதலை நாள் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி புதுச்சேரி கடற்கடையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை, தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், கிராமிய நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சட்டப்பேரவை தலைவர் ராஜவேலு, உள்துறை அமைச்சர் நமசிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி மட்டுமின்றி புதுச்சேரி பகுதிகளான காரைக்கால், மாகி, ஏனம் பகுதிகளில் புதுச்சேரி விடுதலை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்கள், தலைவர்களின் சிலைகள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
No comments