சிவகங்கை அருகே அதிமுக கிளைச் செயலாளர் வெட்டி படுகொலை.
சிவகங்கை அருகே நாட்டாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். அதிமுக கிளைச் செயலாளரான இவர் சிவகங்கை நகரில் வசித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கனேசன் நாட்டாகுடியில் உள்ள இவரது பூர்வீக வீட்டில் பெட்டிக்கடையும் நடத்தியும் வருகிறார். இன்று காலையில் வழக்கம் போல கடையை திறக்க நாட்டாகுடிக்கு சென்ற போது கடை வாசலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சூழ்ந்து கொண்டு அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
தகவல் அறிந்து வந்த திருப்பாச்சேத்தி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மானாமதுரை DSP நிரேஸ் பழனிவேல் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நாட்டாக்குடியில் உள்ள கோயிலில் சிலை வைப்பது தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாகவும், அந்த முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்தது.
இந்நிலையில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை திருப்பாச்சேத்தி காவலர் ராஜா அவதூறாக பேசியதால் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் செய்தியாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்ததை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஸ் டோங்கரே உறுதியளித்தார்.
சிவகங்கையில் கடந்த 5 தினங்களில் 3 கொலைகள் நடைபெற்று உள்ளது. இதில் ஒருவரை கூட காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடரும் கொலை சம்பவங்களால் சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
No comments