சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது..
புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியில் அரசு படகு குழாம் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாநில இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது போலீசாரை கண்டதும் நான்குபேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயற்சித்தனர். போலீஸார் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மாதேஷ்(20), பிரேம் என்ற பிரேம்குமார்(23), பரணி என்ற பரணிராஜ்(20), காக்காயந்தோப்பு ராமு என்ற ராமலிங்கம்(21) ஆகியோர் என்பது தெரிய வந்தது.இதில் மாதேஷ் மீது ஏற்கனவே 2 திருட்டு வழக்குகள் உள்ளதும் இவர்கள் 4 பேரும் காக்காயந்தோப்பு சதீஷ் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள காக்காயந்தோப்பு சதீஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
No comments