Breaking News

மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல் ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு:- 100-க்கு மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கருப்புக் கொடி ஏந்தி முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயற்சி:-

 



மயிலாடுதுறை நகராட்சி சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் நகராட்சியுடன் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, வார்டுகள் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சியுடன், மன்னம்பந்தல் ஊராட்சியில் நகராட்சி பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள பகுதிகளையும், மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியையும் நகராட்சியுடன் இணைப்பதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இந்நிலையில், மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமமக்கள் 300-க்கு மேற்பட்டோர் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம், ரூரல் ஊராட்சியில் 85 சதவீத மக்கள் விவசாய கூலி மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும், நகராட்சியுடன் இணைத்தால் அவர்கள் வேலை இழப்பிற்கும் ஆளாக நேரிடும் என்பதால் ரூரல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என ஆட்சேபனை மனு அளித்தனர்.

இந்நிலையில், ரூரல் ஊராட்சியில் கிராமமக்கள் 100-க்கு மேற்பட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக கைகளில் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டவாறு வந்த கிராமமக்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைய விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும், கிராமமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!