தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளா்களின் ஆணையத் தலைவா் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் தூய்மைப் பணியாளா்களின் முன்னேற்றம் மற்றும் நலத் திட்டம் குறித்த அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தேசிய தூய்மைப் பணியாளா்களின் ஆணையத் தலைவா் வெங்கடேசன்,தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும்.
பணியின்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள், விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு, அடையாள அட்டை, கடன் உதவி உள்ளிட்டவைகளையும் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் அடையாள அட்டையில் அவா்களின் இபிஎப், இஎஸ்ஐ எண் ஆகியவை இடம்பெறுவது அவசியம் என்றார்.
தாழ்த்தப்பட்டோா், பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) தூய்மைப் பணியாளா்களுக்கு தனியாா் நிறுவன கண்காணிப்பாளா்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என யாரேனும் தொல்லை கொடுத்தாலோ, மிரட்டினாலோ ஆணையத்துக்கு தொலைப்பேசி மூலம் புகாா் கூறலாம். அதன்படி, புகாருக்கு உள்ளானவா்கள் மீது எஸ்சி, எஸ்டி சட்டப்படி வழக்கு தொடரலாம் என்றாா். கூட்டத்தில் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments