திருப்பதி போலீசார் புதுச்சேரியில் விசாரணை..
திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாளை தரிசிக்க புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் கொடுத்த கடிதத்தை வைத்து டிக்கெட் வாங்கி கள்ளச்சந்தையில் விற்றது தொடர்பாக திருப்பதி போலீசார் புதுச்சேரியில் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாளை தரிசிக்க புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் இருந்து விஐபி தரிசனத்திற்கு தனி கோட்டா உள்ளது.இதற்கான பரிந்துரை கடிதத்தை புதுச்சேரி தாகூர் நகரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் பெற்றுள்ளார். அதை வைத்து 6 பேருக்கு தலா ரூ.300 என விஐபி தரிசன டிக்கெட் வாங்கியுள்ளார். இந்த 6 டிக்கெட்டையும் நெல்லூரை சேர்ந்த மருத்துவர் ஒருவரது குடும்பத்திற்கு 23 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதற்கான தொகையை ஜிபே மூலம் அவர் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் தரிசனத்திற்கு அவர் ஏற்பாடு செய்யவில்லையாம். இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட மருத்துவர் தரப்பில் புகார் அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை நடத்தியதில் விஐபி தரிசன டிக்கெட் போலி சந்தையில் விற்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பதி காம்ப்ளக்ஸ் போலீசார், புதுச்சேரி தாகூர் நகரைச் சேர்ந்த பத்மநாபனை நேற்று பிடித்து விசாரித்ததோடு, அவரை புதுச்சேரி சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கும் விசாரணைக்காக அழைத்து வந்து அவருக்கு விஐபி கடிதம் கொடுத்தது தொடர்பாக விசாரித்தனர். இச்சம்பவத்தால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments