குடிபோதையில் கார் ஓட்டி தொடர் விபத்து ஏற்படுத்திய இளைஞர்களை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி, காலாப்பட்டில் இருந்து இ.சி.ஆர்., வழியாக நேற்று மாலை தமிழக பதிவெண் கொண்ட சொகுசு கார் புதுச்சேரி நோக்கி வேகமாக வந்தது. ராஜிவ் சதுக்கம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அவ்வழியே பைக்குகள் மற்றும் கார்கள் மீது அடுத்தடுத்து மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதை கண்ட மற்ற வாகன ஓட்டிகள், காரை விரட்டிச் சென்றனர். போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
கார் நெல்லித்தோப்பு சிக்னல் வழியாக இந்திரா சதுக்கம் அருகே சென்றபோது, 'ரெட்' சிக்னலில் சிக்கி நின்றது. பின் தொடர்ந்து வந்தவர்கள், கார் டிரைவரை கீழே இறக்கியபோது, அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.ஆத்திரமடைந்த பொதுமக்கள், டிரைவர் மற்றும் காரில் இருந்த 7 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களை போலீசார் விசாரணை செய்ததில், காரை ஓட்டியவர் சென்னையை சேர்ந்த கரண்,21; என்பதும், தனது நண்பர்கள் 7 பேருடன், புதுச்சேரி பல்கலையில் படிக்கும் மற்றொரு நண்பரை பார்த்துவிட்டு, டு, மது அருந்திவிட்டு வந்தபோது விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது.இதையடுத்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் கரண் மீது குடிபோதையில் கார் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
No comments