தவெக மாநாட்டில் இளைஞர்களின் எழுச்சியை பார்க்க முடிந்தது என்றும் இதை மனதார பாராட்டுகிறேன் என முதல்வர் ரங்கசாமி கருத்து தெரிவித்துள்ளார்..
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏவும், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் மூலம் நடிகர் விஜயுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு அறிமுகம் கிடைத்தது. 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்து என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசின் முதலமைச்சராக பதவியேற்ற ரங்கசாமி விஜய்யை பனையூரில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்து பேசினார்.இதன் மூலம் ரங்கசாமி, விஜய் இடையே நெருக்கம் உண்டானது. கட்சி தொடங்கும் முன்பாக முதலமைச்சர் ரங்கசாமியிடம், பல்வேறு ஆலோசனைகளை விஜய் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டினை,முதலமைச்சர் ரங்கசாமி, கோரிமேட்டில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து பார்த்தார். முழுமையாக விஜய் பேச்சையும் கேட்டார்.
மாநாடு குறித்து தனது நெருங்கிய வட்டாரத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி,நடிகர் விஜய்க்கு இளம் வயது. அவர் நினைத்திருந்தால் இன்னும் பல படங்களில் நடித்து பல கோடிகளை சம்பளமாக பெற்றிருக்க முடியும். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். இது பாராட்டுக்குரியது.
மாநாட்டுக்கு வந்துள்ளவர்கள் அனைவரும் இளைஞர்களாக உள்ளனர். மேடையிலும் இளைஞர்களே இருந்தனர். மாநாட்டில் இளைஞர்களின் எழுச்சியை பார்க்க முடிந்தது. இதை மனதார பாராட்டுகிறேன். அவர் பல வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments